Pages

Saturday, October 10, 2015

HOPE


Finally the spring of my life's arrived
rain once cold leaves streaks of light
petals in my garden of every shade
cast away the shadows that winter laid

Long eerie nights of endless prayer
backgroud music was sobs of despair
not even the ghost under my bed cared

I wished upon the stars in the dark gloomy sky
'give me just one day to smile in delight'
that's when life took me by surprise
today I'm the happiest girl alive

Every blooming flower brings a hint of hope
promising to turn my dreams to deed
and if ever winter comes again
I know just how to save my soul


My daughter's ....   Thahany

நம்பிக்கை

June 23, 2014 at 1:07pm
இறுதியில்
என் வாழ்வின் வசந்தம் வந்து விட்டது,

எப்போதுமே குளிர் சுமந்த மழை
ஒளிக் கீற்றை
வான வில்லாய் வடிவமைத்திருக்கிறது
எனது தோட்டத்தின்
ஒவ்வொரு நிழலின் இதழ்களும்
கார்காலம் பதித்த தடங்களைத்
துடைத்து எறிந்திருக்கின்றன.

நீண்ட காரிருள் பரவிய
முடிவிலா இரவுகளின்
பிரார்த்தனைகளின் பின்னணி இசை,
எனது கட்டிலின் கீழ் துயிலும்
சாத்தான்கூடப் பொருட்படுத்தாத
ஏமாற்றங்களின் தேம்பல்களாகியிருக்கின்றன.

வாழ்க்கை
என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஒருநாளில்
இருண்ட ஏமாற்றமளிக்கும்
வானத்திற்கும் அப்பால்
 நட்சத்திரங்களிடம் விண்ணப்பித்திருந்தேன்,

'எனக்கென ஒரேயொரு நாள் தாருங்கள் -
நான் மகிழ்ச்சியில் புன்னகைக்க" என்று
அதனால்.
நானே இன்று உயிருடன் உள்ள
ஒரேயொரு மகிழ்ச்சியான சிறுமி.

மலர்கின்ற ஒவ்வொரு மலரும்
எனது கனவுகளை
நனவாக்குவதாய் உறுதியளிக்கின்றன.

மீண்டும் எப்போதெல்லாம்
கார்காலம் சூழ்கின்றதோ
அப்போதெல்லாம்
எனது ஆத்மாவை
எப்படிப் பாதுகாப்பது என்பதை
நான் அறிந்து வைத்துள்ளேன்

In english: Fathima Thahany
In Tamil:   Dr. Najimudeen


நிஜங்கள் கதைகளாகலாம் - 1 - சித்ராணி



மாத்தளைக் குளிர் ஓரளவு இதமாகவே இருப்பது போலவே இருந்தது. இரவு நீண்ட நேரம் வைத்தியசாலையின்  விடுதிகளில் கழித்த களைப்பில் இன்னும் சிறிது தூங்கலாம் என்று போர்வையை எடுத்து மீண்டும் உடம்பினை அதனது அரவணைப்பில் தள்ளிய போதுதான் தொலைபேசி அலறியது. சோம்பல் இன்னும் குறையாது இழுத்துக் கொண்டிருந்தாலும், வேறு வழியின்றி போர்வையைத் தள்ளிவிட்டு எழுகின்றேன் நேரம் இரண்டு மணி தாண்டியிருந்தது.

அப்பொழுது தான் தெரிந்தது.
இரவு உடை கூட மாற்றாது அப்படியே உறங்கியிருக்கின்றேன் என்று. எனக்கு அது வழக்கமானது. காற்சட்டை கூட கழற்றாமல் தூங்கிப் போவது எனது தொழிலில் மிகவும் சகஜமானது. இரவு வேலை என்றால் எந்த நேரம் அழைப்பு வரும் என்று தெரியாததால் அப்படியே தூங்கி விடுவது உண்டு.

உடனடியாகச் சென்று தொலைபேசியை எடுத்து காதில் சொருகினேன். மறு முனையில் மாத்தளை வைத்தியசாலை ஏழாம் விடுதியில் இருந்து நர்ஸ் தொடர்பு கொண்டிருந்தார். " டாக்டர் சித்ராணி நிலவரம் நல்லாயில்லை. உடனே வர முடியுமா"

சித்ராணியை தெரியாதவர் அந்த விடுதியில் யாரும் இல்லை. நான் அந்த வைத்தியசாலைக்கு வந்து ஒரு வருடமாகிறது. அவள் அங்கு பல ஆண்டுகளாக அரசோச்சுகின்ற ஒரு நோயாளி. சுமார் 9 அல்லது 10 வயதிருக்கும். அவளை ஏன் அரசி என்று சொன்னேன் என்றால் அவள் மீது அந்த அளவுக்கு எல்லோரும் பிரியம் வைத்திருந்தனர். மாதம் தவறாமல் விடுதிக்கு வருவதும், தனது நோயையும் பொருட்படுத்தாது எல்லோருடனும் கலகலப்பாகப் பழகுவதும், எல்லோருக்கும் உதவி செய்வதும், புன்னகை மாறாமல் விடுதி எங்கும் வலம் வருவதும் எந்தத் தடையுமின்றி எல்லோருடனும் எல்லை மீறும் அளவு சுதந்திரம் அவள் அனுபவித்தாள்.
 
அவளைப் பார்க்கும் எவரும் அவள் ஒரு சிறு நீரக நோயாளி என்று சொல்ல மாட்டார்கள். அந்த விடுதி தத்தெடுத்து வளர்க்கின்ற ஒரு செல்லப் பிள்ளையாகவே நினைத்துக் கொள்வர். அவளது சிறு நீரக நோய் மிகவும் முற்றிய கட்டத்தில் இருப்பது தாதியர், வைத்தியர் மற்றும் விடுதியின் சிறுவர் நோய் விசேட வைத்திய நிபுணர்  ஐரா சேனநாயக மேடம் ஆகியோருக்கு மட்டும் தெரியும். மேடத்துக்கு அவள் மேல் கொள்ளைப் பிரியம். அவர் விடுதிக்கு வந்தால் அவர் பின்னாலேயே அவளும் அலைவாள். அடிக்கடி அவளுக்கு பரிசுகளும் உடைகளும், உணவுப் பொருட்களும் என அவளை அவர் குளிப்பாட்டுவார்.

Nephrotic Syndrome நான் நேரடியாகப் படித்தது அவளில்தான், சிகிச்சை காரணமாக உப்பிய கன்னங்களுடனான வட்ட முகம், உருட்டும் விழிகள், அடர்ந்த தலைமுடி , அழகான உதடுகள், சடசடத்த பேச்சு, சளைக்காத சிரிப்பு, சிறிது நேரம் கூட உட்காராமல் ஓடிக்கொண்டே இருக்கும் உற்சாகம். இவைகள் எல்லாம்  இனம் புரியாத ஒரு அன்பையும் பாசத்தையும் எனக்கும் அவள் மேல் ஏற்படுத்தியிருந்தது.

தொலைபேசி அழைப்பில் சித்ராணி பற்றிக் குறிப்பிட்டவுடன் எனக்குப் பக் என்றது. என்ன ஆச்சோ என்று மனம் பதறியது. நேற்று இரவு அவள் பற்றி நான் எடுத்துக் கொண்ட கரிசனை ஞாபகத்துக்கு வந்தது.  அவள் சிறிது சிரமப்பட்டது எனக்குத் தெரியும்.

அவளது இரத்தத்தில் ஹீமோ  குளோபின் மட்டம் குறைந்து இருந்தது எனக்குத் தெரியும், உடனடியாகவே மேடத்துக்கு அறிவித்து இரத்தம் கொடுக்கவா என்று கேட்டிருந்தேன். அப்பொழுது நேரம் இரவு 12 மணிக்கு மேல், மாத்தளை வைத்தியசாலை தான் எனது முதல் வைத்தியசாலை, உள்ளகப் பயிற்சி யில்தான் நானிருந்தேன், இருபத்து நான்கு மணி நேர வேலை, இரண்டு நாட்களுக்கொரு நாள் ஓய்வு, சில வேளைகளில் அதுவும் கிடைக்காது.

எனது நிலைமையை நன்கு தெரிந்து வைத்திருந்த மேடம் அன்றிரவு என்மேல் இரக்கப் பட்டார் என்பதனை நான் நன்கு அறிவேன். சித்ராணிக்கு இரத்தம் கொடுக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்பினாலும், நீ பகல் முழுவதும் வேலை செய்து களைப்பாயிருக்கிறாய், நாளை காலையில் கொடுத்துக் கொள்ளலாம், இப்பொழுது போய் தூங்கு, என்று என்னை அனுப்பி வைத்தவர் அவர்தான்.

 என்னவோ ஏதோ என்று ஓட்டம் ஓட்டமாக விடுதியினைச் சென்றடைந்தேன்.

சித்ராணியை சுற்றி தாதியர் பட்டாளம் கூடியிருந்தது. விடுதி முழுவதும் நித்திரையைத் தொலைத்திருந்தது. ஏனைய குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்க அவர்களது தாய் மார் கூடிக் கூடி குழப்பத்தில் ஆழ்ந்திருந்தார்கள் , எல்லோருக்குமே சித்ராணிக்கு என்னாகி விடுமோ என்கின்ற சோகம் தொற்றியிருந்தது. என்னைக் கண்ட தாதியர் கூட்டம் ஒதுங்கி வழிவிட மங்கலிகா, மெனிக்கே, சோமா, நவகமுவ நால்வரும் ஒரு குரலில் டாக்டர் என்றார்கள், அவர்கள் வேறு எதுவும் பேச வண்டிய தேவை இருக்கவில்லை, உடனடியாக மேடத்துக்கு அறிவித்து விட்டு இரத்த வங்கியை நோக்கி ஓட்டமெடுத்தேன்.

சில நிமிடங்களில் இரத்தம் ஆயத்தமாகி விட்டது, அவளது க்ரூப் உடன் உடன்படக் கூடிய இரத்தத்தைப் பரீட்சித்து எடுத்து வர எனக்கு சில நிமிடங்களே எடுத்தன. ஒரே ஓட்டமாக விடுதியினை நோக்கி ஓடினேன், எப்படியாவது அவளது உயிரைக் காப்பாற்றி விட வேண்டும் என்ற வெறி இருந்தது. விடுதியினை நெருங்கியவுடன் தான் எல்லாமே முடிந்து விட்டது தெரிந்தது.

மேடம் தாதியர் அறையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார். எத்தனை மரணங்களைப் பார்த்தவர் அவர். இப்படியும் அழுவாரா.
அவரது உதடுகள் முணுமுணுத்தன, நான் உனது பேச்சை கேட்டிருக்க வேண்டும், நேற்றிரவே அவளுக்கு இரத்தம் கொடுத்திருக்க வேண்டும், இது என்னோடு கூடவே வரப் போகின்ற ஒரு மரணம்.அவரது குரல் மிகவும் உடைந்திருந்தது.

நானும் கூட எத்தனயோ மரணங்களைப் பார்த்தவன், முப்பது வருடங்களாகியும் இன்னும் ஞாபகத்தில் இருந்து தொலைக்கிறது, மேடம் ஐரா சேனநாயகே வை இருபத்து ஒரு வருடங்களின் பின் லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சந்தித்த போது அந்த சித்ராணி தான் கண் முன் வந்து சென்றாள். இன்னும் எத்தனை வருடங்கள் இவளை சுமக்கப் போகின்றேனோ.

பவானி டீச்சர்



டாக்டர் . யோகி மிகவும் சிந்தனையில் ஆழ்ந்து கண்களை மூடி வேறோர் உலகத்தில் இருப்பது போல் பட்டது. அவரது சிந்தனையைக் கலைப்பதா, அல்லது அவரை மீண்டும் இந்த உலகத்துக்குக் கொண்டு வருவதா என்று என்னால் முடிவெடுக்க முடியவில்லை. விடியற்காலை  ஐந்து மணிக்கு அமைச்சு அலுவலக வாகனம் இருவரையும் தனக்குள் திணித்துக் கொண்டு புறப்பட்டதிலிருந்து ஒரு வித மயக்கத்தில் இருப்பது போலவே யோகி காணப்பட்டார்.

மணித்தியாலக் கணக்கில் நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து பொறுமை இழந்து விட்டேன், மனிதில் ஓடிக் கொண்டிருந்த சிந்தனைகளை யாரிடமாவது பகிர்ந்து கொண்டால் தேவலை போல் பட்டது,

டிரைவர் சிறிவர்தன வை குழப்பக் கூடாது என்று முடிவெடுத்திருந்தேன்.

‘என்ன யோகி இது எம்மட மூணாவது பயணம் இல்லையா’. நான்தான் மௌனத்தைக் கலைத்தேன்.

ம்.. வேறு வார்த்தைகள் வரவில்லை.

‘ஏன் இப்படி ஒரு மௌனம்?’

“மனது அவ்வளவு நிம்மதியாக இல்லை. ‘

‘எனக்குப் புரிகிறது. எத்தனை லட்சம் மக்கள். கம்பி வேலிக்குள் அடைபட்டு, அல்லாடி, அடுத்தவரிடம் எதிர்பார்த்து, சோறு, தண்ணீர் இல்லாது, எந்த வித வசதிகளும் இல்லாது ஒரு பாலை வனம் போன்ற பிரதேசத்தில் எதிர் காலத்தைப் பற்றி எந்த வித உத்தரவாதமுமின்றி. மனசு மிகவும் கனத்துப் போகிறது இல்லையா?”

‘அதை நாங்கள் எத்தனை தரம்தான் காண்பது. டாக்டர் ஆக இருப்பது சில நேரங்களில் வலிகளைத் தருகிறது இல்லையா.  மனிதர்களோட எல்லாவித வலிகளையும் புரிந்து கொள்ளக் கூடியவர்கள் நாங்கள். இந்த மக்களுக்கு எம்மால் எதுவுமே செய்ய முடியவில்லையே எனும்  போது ஏன் அங்கே போக வேண்டும் என்று மனது என்னைக் கேள்வி கேட்கிறது.’

‘ம்…. இழுத்தார் யோகி.

‘ அதுவும் இப்படியான ஒரு கொளுத்தும் வெயிலில், கூடாரங்களுக்குள் இராப் பகலாக, உயிருள்ள பிணங்களாக, செத்த பிணங்களுடன் சிலவேளைகளில்…;

யோகி எதுவும் பேசவில்லை. நானே தொடர்ந்தேன்,

நான் இங்கு விரும்பித்தான் வருகிறேன், யோகி,  அதற்கு இரண்டு காரணங்கள், ஒன்று இதற்கு நாம் சாட்சியாக வேண்டும். எம்மால் முடிந்த ஏதாவது செய்ய வேண்டும், மற்றையது என்னுடைய பவானி டீச்சர் ஐத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும்.’

யோகியின் தலை நிமிர்ந்தது,  “பவானி டீச்சர் ஆ …, யாரது?”

“யோகி, என்னோட வாழ்க்கையில இரண்டு டீச்சர் மார் முக்கிய பங்கு வகித்து இருக்கிறார்கள், ஒன்று ஜெசிமா டீச்சர். இன்னொன்று இந்த பவானி டீச்சர்.”


‘அப்படி என்னதான் செய்தார் அவர்.’

யார் பவானி டீச்சர் ஐக் கேட்கிறீரா?

ஆமாம் ..

உனக்குத் தெரியும் நான் இப்போ நாட்டுல இல்லை, உன்னோட குடும்பமும் நாட்டுல இல்லை, ஆனா உங்களுக்கு ஏதோ காரணம் இருந்தது அந்த நாட்டு அரசாங்கங்கள் உங்களை ஏற்றுக் கொள்வதற்கு, ஆனா, எங்களை ஏற்றுக்கொள்வ தற்கு ஒரே ஒரு காரணம் எங்கட படிப்பும் தொழிலும் தானே. அது பவானி டீச்சர் எனக்குப் போட்ட பிச்சை யாகத்தான் நான் பார்க்கிறேன்.

ஏனென்றால், எழுபதுகளில் நான் பிறந்து வளர்ந்து படித்த சாய்ந்தமருது போன்ற பகுதிகளில் மேல் படிப்பு என்பது, என்னைப் போன்ற ஏழைகளுக்கு நினைத்து பார்க்க முடியாத ஒன்று. நானும் உயர்தரம் படித்து ஒருதடவை பரீட்சைக்குத் தோற்றி விட்டு முடியாமல், ஏதோ தொழில் கிடைக்காதா என்று ஏங்கி அலைந்து கொண்டிருந்த காலம்.

ஆனால் நான் ஒரு துடிப்பான பையன், எங்கேயும் இருக்க மாட்டேன், சுற்றிக் கொண்டே இருப்பேன், அப்படி சுற்றித் திரியும் போதுதான் ஒரு கட்டத்தில் எனது சகோதரி தனது கணவரோட இடமாற்றம் பெற்றுச் சென்றிருந்த கிண்ணியாவுக்கு வந்து விட்டேன், நான் விளையாட்டுக்காகத்தான் வந்தேன், ஆனால் அங்கே எனக்கான வழிகாட்டி இருப்பது எனக்கே தெரியாமல் இருந்தது.

எனது சகோதரியின் கணவர் ஒரு ஆசிரியர், பவானி டீச்சர் இன் பக்கத்து விடுதியில் குடியிருந்தார். நான் அவர்கள் எல்லோரும் பாடசாலை சென்றபின் முன் பக்கம் படிக்கட்டில் உட்கார்ந்து பாடசாலைப் பிள்ளைகள் மைதானத்தில் விளையாடு வதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பேன்,

அப்படி இருக்கும்போதுதான்  ஒருநாள் பவானி டீச்சர் என்னைக் கண்டார். யார் எவர் என்று விசாரித்தார். நான் சொன்னேன், ஏ, எல். சறுக்கி விட்டது, சும்மா பொழுது போக்குகிறேன் என்று.

உடனே நீ ஏன் விடுதிக்கு வா, நான் என்னால் முடிந்ததைச் சொல்லித் தருகிறேன், மீண்டும் முயற்சி செய். உன்னால் முடியும்.என்றார்.

அவ்வளவு பெரிதாக நம்பிக்கை இருக்கவில்லை, இருந்தும் அவர் பேச்சைத் தட்ட முடியாது ஒத்துக் கொண்டேன், மிகச் சிறிய கால இடை வெளியில் ஒரு நல்ல பயிற்றுவிப்பாளன் போலத் தொழிற்பட்டு என்னை புடம் போட்ட ஒரு கொல்லன்.
என்ன ஆச்சரியம், அடுத்த முறை பரீட்சையில் சித்தியடைந்தது மட்டுமன்றி மருத்துவ பீடத்துக்கும் தெரிவு செய்யப்பட்டு. நினைக்கவே தித்திக்கின்ற நிமிடங்கள்.

இன்றைக்கு நான் பெற்ற எல்லாமே என்னைப் படைத்தவனின் ஏற்பாட்டில் அவரால் கிடைத்தவை என்று தான் நான் நம்புகிறேன்,

கடந்த பல வருடங்களாக அவரை நான் தேடுகிறேன், அவரை கடைசியாகப் பார்த்த போது சாவகச்சேரியில் இருந்தார், அதன் பின் புலம் பெயர்ந்து எங்காவது சென்றிருப்பார் என்றிருந்தேன், ஆனால் என்னவோ தெரியவில்லை, அவரை ஒரு முறை பார்க்க வேண்டும் என்று மனது தவிக்கிறது, அதற்காகவே இந்த நரகத்துக்கு மீண்டும் மீண்டும் வருகிறேன்,

யுத்தம் மக்களோட வாழ்க்கையில் எவ்வளவோ விளையாடி விட்டது இல்லையா, யுத்தம், அதன் தாக்கங்கள் எல்லாவற்றையும் நினைக்கும் பொழுது
எப்பொழுதும் எனக்கு அவர் ஞாபகம் வந்தபடியே இருக்கும்,

அவர் எனது வாழ்கையில் ஏற்படுத்திய மாற்றத்தை நினைக்கும் போது நன்றி பொங்கிப் பிரவாகிக்கும்,

தொடர்பின்றிப் போய் மிக நீண்ட நாட்களாகி விட்டது, இருந்தும் நான் அப்பொழுது நன்றி சொன்னேனா என்று தெரியவில்லை, இப்பொழுது மிகப் பெரிய நன்றியைக் காணிக்கையாக்க வேண்டும், மீண்டும் ஒருமுறை காண்பேனா. ‘

நஜி . நீ என்னோட சிந்தனையையே கலைத்து விட்டாய்.

அதுதானே என்னோட நோக்கம், திரும்பவும் சிந்தனைக்குள் போகக் கூடாது , மீண்டும் இன்னுமொரு கதையில் ஆரம்பித்து விடுவேன், சரிதானே.

சரிதான்,

வாகனம் மதவாச்சியை எட்டிக் கொண்டிருந்தது.

( இது எனது பவானி டீச்சர் இற்கு சமர்ப்பணம்)


DR. நஜிமுதீன்.