டாக்டர் . யோகி மிகவும் சிந்தனையில் ஆழ்ந்து கண்களை மூடி வேறோர் உலகத்தில் இருப்பது போல் பட்டது. அவரது சிந்தனையைக் கலைப்பதா, அல்லது அவரை மீண்டும் இந்த உலகத்துக்குக் கொண்டு வருவதா என்று என்னால் முடிவெடுக்க முடியவில்லை. விடியற்காலை ஐந்து மணிக்கு அமைச்சு அலுவலக வாகனம் இருவரையும் தனக்குள் திணித்துக் கொண்டு புறப்பட்டதிலிருந்து ஒரு வித மயக்கத்தில் இருப்பது போலவே யோகி காணப்பட்டார்.
மணித்தியாலக் கணக்கில் நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து பொறுமை இழந்து விட்டேன், மனிதில் ஓடிக் கொண்டிருந்த சிந்தனைகளை யாரிடமாவது பகிர்ந்து கொண்டால் தேவலை போல் பட்டது,
டிரைவர் சிறிவர்தன வை குழப்பக் கூடாது என்று முடிவெடுத்திருந்தேன்.
‘என்ன யோகி இது எம்மட மூணாவது பயணம் இல்லையா’. நான்தான் மௌனத்தைக் கலைத்தேன்.
ம்.. வேறு வார்த்தைகள் வரவில்லை.
‘ஏன் இப்படி ஒரு மௌனம்?’
“மனது அவ்வளவு நிம்மதியாக இல்லை. ‘
‘எனக்குப் புரிகிறது. எத்தனை லட்சம் மக்கள். கம்பி வேலிக்குள் அடைபட்டு, அல்லாடி, அடுத்தவரிடம் எதிர்பார்த்து, சோறு, தண்ணீர் இல்லாது, எந்த வித வசதிகளும் இல்லாது ஒரு பாலை வனம் போன்ற பிரதேசத்தில் எதிர் காலத்தைப் பற்றி எந்த வித உத்தரவாதமுமின்றி. மனசு மிகவும் கனத்துப் போகிறது இல்லையா?”
‘அதை நாங்கள் எத்தனை தரம்தான் காண்பது. டாக்டர் ஆக இருப்பது சில நேரங்களில் வலிகளைத் தருகிறது இல்லையா. மனிதர்களோட எல்லாவித வலிகளையும் புரிந்து கொள்ளக் கூடியவர்கள் நாங்கள். இந்த மக்களுக்கு எம்மால் எதுவுமே செய்ய முடியவில்லையே எனும் போது ஏன் அங்கே போக வேண்டும் என்று மனது என்னைக் கேள்வி கேட்கிறது.’
‘ம்…. இழுத்தார் யோகி.
‘ அதுவும் இப்படியான ஒரு கொளுத்தும் வெயிலில், கூடாரங்களுக்குள் இராப் பகலாக, உயிருள்ள பிணங்களாக, செத்த பிணங்களுடன் சிலவேளைகளில்…;
யோகி எதுவும் பேசவில்லை. நானே தொடர்ந்தேன்,
நான் இங்கு விரும்பித்தான் வருகிறேன், யோகி, அதற்கு இரண்டு காரணங்கள், ஒன்று இதற்கு நாம் சாட்சியாக வேண்டும். எம்மால் முடிந்த ஏதாவது செய்ய வேண்டும், மற்றையது என்னுடைய பவானி டீச்சர் ஐத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும்.’
யோகியின் தலை நிமிர்ந்தது, “பவானி டீச்சர் ஆ …, யாரது?”
“யோகி, என்னோட வாழ்க்கையில இரண்டு டீச்சர் மார் முக்கிய பங்கு வகித்து இருக்கிறார்கள், ஒன்று ஜெசிமா டீச்சர். இன்னொன்று இந்த பவானி டீச்சர்.”
‘அப்படி என்னதான் செய்தார் அவர்.’
யார் பவானி டீச்சர் ஐக் கேட்கிறீரா?
ஆமாம் ..
உனக்குத் தெரியும் நான் இப்போ நாட்டுல இல்லை, உன்னோட குடும்பமும் நாட்டுல இல்லை, ஆனா உங்களுக்கு ஏதோ காரணம் இருந்தது அந்த நாட்டு அரசாங்கங்கள் உங்களை ஏற்றுக் கொள்வதற்கு, ஆனா, எங்களை ஏற்றுக்கொள்வ தற்கு ஒரே ஒரு காரணம் எங்கட படிப்பும் தொழிலும் தானே. அது பவானி டீச்சர் எனக்குப் போட்ட பிச்சை யாகத்தான் நான் பார்க்கிறேன்.
ஏனென்றால், எழுபதுகளில் நான் பிறந்து வளர்ந்து படித்த சாய்ந்தமருது போன்ற பகுதிகளில் மேல் படிப்பு என்பது, என்னைப் போன்ற ஏழைகளுக்கு நினைத்து பார்க்க முடியாத ஒன்று. நானும் உயர்தரம் படித்து ஒருதடவை பரீட்சைக்குத் தோற்றி விட்டு முடியாமல், ஏதோ தொழில் கிடைக்காதா என்று ஏங்கி அலைந்து கொண்டிருந்த காலம்.
ஆனால் நான் ஒரு துடிப்பான பையன், எங்கேயும் இருக்க மாட்டேன், சுற்றிக் கொண்டே இருப்பேன், அப்படி சுற்றித் திரியும் போதுதான் ஒரு கட்டத்தில் எனது சகோதரி தனது கணவரோட இடமாற்றம் பெற்றுச் சென்றிருந்த கிண்ணியாவுக்கு வந்து விட்டேன், நான் விளையாட்டுக்காகத்தான் வந்தேன், ஆனால் அங்கே எனக்கான வழிகாட்டி இருப்பது எனக்கே தெரியாமல் இருந்தது.
எனது சகோதரியின் கணவர் ஒரு ஆசிரியர், பவானி டீச்சர் இன் பக்கத்து விடுதியில் குடியிருந்தார். நான் அவர்கள் எல்லோரும் பாடசாலை சென்றபின் முன் பக்கம் படிக்கட்டில் உட்கார்ந்து பாடசாலைப் பிள்ளைகள் மைதானத்தில் விளையாடு வதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பேன்,
அப்படி இருக்கும்போதுதான் ஒருநாள் பவானி டீச்சர் என்னைக் கண்டார். யார் எவர் என்று விசாரித்தார். நான் சொன்னேன், ஏ, எல். சறுக்கி விட்டது, சும்மா பொழுது போக்குகிறேன் என்று.
உடனே நீ ஏன் விடுதிக்கு வா, நான் என்னால் முடிந்ததைச் சொல்லித் தருகிறேன், மீண்டும் முயற்சி செய். உன்னால் முடியும்.என்றார்.
அவ்வளவு பெரிதாக நம்பிக்கை இருக்கவில்லை, இருந்தும் அவர் பேச்சைத் தட்ட முடியாது ஒத்துக் கொண்டேன், மிகச் சிறிய கால இடை வெளியில் ஒரு நல்ல பயிற்றுவிப்பாளன் போலத் தொழிற்பட்டு என்னை புடம் போட்ட ஒரு கொல்லன்.
என்ன ஆச்சரியம், அடுத்த முறை பரீட்சையில் சித்தியடைந்தது மட்டுமன்றி மருத்துவ பீடத்துக்கும் தெரிவு செய்யப்பட்டு. நினைக்கவே தித்திக்கின்ற நிமிடங்கள்.
இன்றைக்கு நான் பெற்ற எல்லாமே என்னைப் படைத்தவனின் ஏற்பாட்டில் அவரால் கிடைத்தவை என்று தான் நான் நம்புகிறேன்,
கடந்த பல வருடங்களாக அவரை நான் தேடுகிறேன், அவரை கடைசியாகப் பார்த்த போது சாவகச்சேரியில் இருந்தார், அதன் பின் புலம் பெயர்ந்து எங்காவது சென்றிருப்பார் என்றிருந்தேன், ஆனால் என்னவோ தெரியவில்லை, அவரை ஒரு முறை பார்க்க வேண்டும் என்று மனது தவிக்கிறது, அதற்காகவே இந்த நரகத்துக்கு மீண்டும் மீண்டும் வருகிறேன்,
யுத்தம் மக்களோட வாழ்க்கையில் எவ்வளவோ விளையாடி விட்டது இல்லையா, யுத்தம், அதன் தாக்கங்கள் எல்லாவற்றையும் நினைக்கும் பொழுது
எப்பொழுதும் எனக்கு அவர் ஞாபகம் வந்தபடியே இருக்கும்,
அவர் எனது வாழ்கையில் ஏற்படுத்திய மாற்றத்தை நினைக்கும் போது நன்றி பொங்கிப் பிரவாகிக்கும்,
தொடர்பின்றிப் போய் மிக நீண்ட நாட்களாகி விட்டது, இருந்தும் நான் அப்பொழுது நன்றி சொன்னேனா என்று தெரியவில்லை, இப்பொழுது மிகப் பெரிய நன்றியைக் காணிக்கையாக்க வேண்டும், மீண்டும் ஒருமுறை காண்பேனா. ‘
நஜி . நீ என்னோட சிந்தனையையே கலைத்து விட்டாய்.
அதுதானே என்னோட நோக்கம், திரும்பவும் சிந்தனைக்குள் போகக் கூடாது , மீண்டும் இன்னுமொரு கதையில் ஆரம்பித்து விடுவேன், சரிதானே.
சரிதான்,
வாகனம் மதவாச்சியை எட்டிக் கொண்டிருந்தது.
( இது எனது பவானி டீச்சர் இற்கு சமர்ப்பணம்)
DR. நஜிமுதீன்.
No comments:
Post a Comment