Pages

Saturday, October 10, 2015

நிஜங்கள் கதைகளாகலாம் - 1 - சித்ராணி



மாத்தளைக் குளிர் ஓரளவு இதமாகவே இருப்பது போலவே இருந்தது. இரவு நீண்ட நேரம் வைத்தியசாலையின்  விடுதிகளில் கழித்த களைப்பில் இன்னும் சிறிது தூங்கலாம் என்று போர்வையை எடுத்து மீண்டும் உடம்பினை அதனது அரவணைப்பில் தள்ளிய போதுதான் தொலைபேசி அலறியது. சோம்பல் இன்னும் குறையாது இழுத்துக் கொண்டிருந்தாலும், வேறு வழியின்றி போர்வையைத் தள்ளிவிட்டு எழுகின்றேன் நேரம் இரண்டு மணி தாண்டியிருந்தது.

அப்பொழுது தான் தெரிந்தது.
இரவு உடை கூட மாற்றாது அப்படியே உறங்கியிருக்கின்றேன் என்று. எனக்கு அது வழக்கமானது. காற்சட்டை கூட கழற்றாமல் தூங்கிப் போவது எனது தொழிலில் மிகவும் சகஜமானது. இரவு வேலை என்றால் எந்த நேரம் அழைப்பு வரும் என்று தெரியாததால் அப்படியே தூங்கி விடுவது உண்டு.

உடனடியாகச் சென்று தொலைபேசியை எடுத்து காதில் சொருகினேன். மறு முனையில் மாத்தளை வைத்தியசாலை ஏழாம் விடுதியில் இருந்து நர்ஸ் தொடர்பு கொண்டிருந்தார். " டாக்டர் சித்ராணி நிலவரம் நல்லாயில்லை. உடனே வர முடியுமா"

சித்ராணியை தெரியாதவர் அந்த விடுதியில் யாரும் இல்லை. நான் அந்த வைத்தியசாலைக்கு வந்து ஒரு வருடமாகிறது. அவள் அங்கு பல ஆண்டுகளாக அரசோச்சுகின்ற ஒரு நோயாளி. சுமார் 9 அல்லது 10 வயதிருக்கும். அவளை ஏன் அரசி என்று சொன்னேன் என்றால் அவள் மீது அந்த அளவுக்கு எல்லோரும் பிரியம் வைத்திருந்தனர். மாதம் தவறாமல் விடுதிக்கு வருவதும், தனது நோயையும் பொருட்படுத்தாது எல்லோருடனும் கலகலப்பாகப் பழகுவதும், எல்லோருக்கும் உதவி செய்வதும், புன்னகை மாறாமல் விடுதி எங்கும் வலம் வருவதும் எந்தத் தடையுமின்றி எல்லோருடனும் எல்லை மீறும் அளவு சுதந்திரம் அவள் அனுபவித்தாள்.
 
அவளைப் பார்க்கும் எவரும் அவள் ஒரு சிறு நீரக நோயாளி என்று சொல்ல மாட்டார்கள். அந்த விடுதி தத்தெடுத்து வளர்க்கின்ற ஒரு செல்லப் பிள்ளையாகவே நினைத்துக் கொள்வர். அவளது சிறு நீரக நோய் மிகவும் முற்றிய கட்டத்தில் இருப்பது தாதியர், வைத்தியர் மற்றும் விடுதியின் சிறுவர் நோய் விசேட வைத்திய நிபுணர்  ஐரா சேனநாயக மேடம் ஆகியோருக்கு மட்டும் தெரியும். மேடத்துக்கு அவள் மேல் கொள்ளைப் பிரியம். அவர் விடுதிக்கு வந்தால் அவர் பின்னாலேயே அவளும் அலைவாள். அடிக்கடி அவளுக்கு பரிசுகளும் உடைகளும், உணவுப் பொருட்களும் என அவளை அவர் குளிப்பாட்டுவார்.

Nephrotic Syndrome நான் நேரடியாகப் படித்தது அவளில்தான், சிகிச்சை காரணமாக உப்பிய கன்னங்களுடனான வட்ட முகம், உருட்டும் விழிகள், அடர்ந்த தலைமுடி , அழகான உதடுகள், சடசடத்த பேச்சு, சளைக்காத சிரிப்பு, சிறிது நேரம் கூட உட்காராமல் ஓடிக்கொண்டே இருக்கும் உற்சாகம். இவைகள் எல்லாம்  இனம் புரியாத ஒரு அன்பையும் பாசத்தையும் எனக்கும் அவள் மேல் ஏற்படுத்தியிருந்தது.

தொலைபேசி அழைப்பில் சித்ராணி பற்றிக் குறிப்பிட்டவுடன் எனக்குப் பக் என்றது. என்ன ஆச்சோ என்று மனம் பதறியது. நேற்று இரவு அவள் பற்றி நான் எடுத்துக் கொண்ட கரிசனை ஞாபகத்துக்கு வந்தது.  அவள் சிறிது சிரமப்பட்டது எனக்குத் தெரியும்.

அவளது இரத்தத்தில் ஹீமோ  குளோபின் மட்டம் குறைந்து இருந்தது எனக்குத் தெரியும், உடனடியாகவே மேடத்துக்கு அறிவித்து இரத்தம் கொடுக்கவா என்று கேட்டிருந்தேன். அப்பொழுது நேரம் இரவு 12 மணிக்கு மேல், மாத்தளை வைத்தியசாலை தான் எனது முதல் வைத்தியசாலை, உள்ளகப் பயிற்சி யில்தான் நானிருந்தேன், இருபத்து நான்கு மணி நேர வேலை, இரண்டு நாட்களுக்கொரு நாள் ஓய்வு, சில வேளைகளில் அதுவும் கிடைக்காது.

எனது நிலைமையை நன்கு தெரிந்து வைத்திருந்த மேடம் அன்றிரவு என்மேல் இரக்கப் பட்டார் என்பதனை நான் நன்கு அறிவேன். சித்ராணிக்கு இரத்தம் கொடுக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்பினாலும், நீ பகல் முழுவதும் வேலை செய்து களைப்பாயிருக்கிறாய், நாளை காலையில் கொடுத்துக் கொள்ளலாம், இப்பொழுது போய் தூங்கு, என்று என்னை அனுப்பி வைத்தவர் அவர்தான்.

 என்னவோ ஏதோ என்று ஓட்டம் ஓட்டமாக விடுதியினைச் சென்றடைந்தேன்.

சித்ராணியை சுற்றி தாதியர் பட்டாளம் கூடியிருந்தது. விடுதி முழுவதும் நித்திரையைத் தொலைத்திருந்தது. ஏனைய குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்க அவர்களது தாய் மார் கூடிக் கூடி குழப்பத்தில் ஆழ்ந்திருந்தார்கள் , எல்லோருக்குமே சித்ராணிக்கு என்னாகி விடுமோ என்கின்ற சோகம் தொற்றியிருந்தது. என்னைக் கண்ட தாதியர் கூட்டம் ஒதுங்கி வழிவிட மங்கலிகா, மெனிக்கே, சோமா, நவகமுவ நால்வரும் ஒரு குரலில் டாக்டர் என்றார்கள், அவர்கள் வேறு எதுவும் பேச வண்டிய தேவை இருக்கவில்லை, உடனடியாக மேடத்துக்கு அறிவித்து விட்டு இரத்த வங்கியை நோக்கி ஓட்டமெடுத்தேன்.

சில நிமிடங்களில் இரத்தம் ஆயத்தமாகி விட்டது, அவளது க்ரூப் உடன் உடன்படக் கூடிய இரத்தத்தைப் பரீட்சித்து எடுத்து வர எனக்கு சில நிமிடங்களே எடுத்தன. ஒரே ஓட்டமாக விடுதியினை நோக்கி ஓடினேன், எப்படியாவது அவளது உயிரைக் காப்பாற்றி விட வேண்டும் என்ற வெறி இருந்தது. விடுதியினை நெருங்கியவுடன் தான் எல்லாமே முடிந்து விட்டது தெரிந்தது.

மேடம் தாதியர் அறையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார். எத்தனை மரணங்களைப் பார்த்தவர் அவர். இப்படியும் அழுவாரா.
அவரது உதடுகள் முணுமுணுத்தன, நான் உனது பேச்சை கேட்டிருக்க வேண்டும், நேற்றிரவே அவளுக்கு இரத்தம் கொடுத்திருக்க வேண்டும், இது என்னோடு கூடவே வரப் போகின்ற ஒரு மரணம்.அவரது குரல் மிகவும் உடைந்திருந்தது.

நானும் கூட எத்தனயோ மரணங்களைப் பார்த்தவன், முப்பது வருடங்களாகியும் இன்னும் ஞாபகத்தில் இருந்து தொலைக்கிறது, மேடம் ஐரா சேனநாயகே வை இருபத்து ஒரு வருடங்களின் பின் லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சந்தித்த போது அந்த சித்ராணி தான் கண் முன் வந்து சென்றாள். இன்னும் எத்தனை வருடங்கள் இவளை சுமக்கப் போகின்றேனோ.

No comments:

Post a Comment